Wednesday, August 31, 2005

Joan of Arcadia

நீண்ட நாட்களின் முன் எழுத நினைத்தது: Joan of Arcadia என்று ஒரு தொலைக்காட்சித் தொடர் எனது அபிமானத்துக்குரியாதாய் இருந்தது. அதன் அடிப்படை கதையோட்டம் வேடிக்கையானதுதான்: ஒரு பதினாறு வயதுப் பெண்ணுடன் கடவுள் வேறு வேறு உருவங்களில் வந்து பேசுவார்; சில வேலைகளைச் செய்யச்சொல்லி பணிப்பார். தொடரின் கதையோட்டம் சிறுபிள்ளைத்தனமானதாக இருந்தாலும் அந்தத் தொடர் அப்படியல்ல. தொடரின் உருவாக்குனரும் எழுத்தாசிரியரும் இந்தக்கதையை வைத்துக் கொண்டு மனித இனத்தினதும் சமுகத்தினதும் வேறு வேறு அம்சங்களையும் அவலட்சணங்களையும் அலசி ஆராய்ந்திருந்தனர். என்னை சிந்திக்க, சிரிக்க, ஏன் அழ வைத்த ஒரு தொடர் இது. முதலாவது பாகத்தில் Golden Globe விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட இந்தத்தொடர், இரண்டாவது பாகம் முடிந்ததோடு துண்டிக்கப்பட்டது (கதை முடியும் முன்னர்)!!

காரணம்? ரசிகர் தொகை கவர்ச்சிகரமாக இல்லையாம்!! இத்தொடரின் ரசிகர் கூட்டத்தில் ஒரு முக்கியமான தரவு என்னவெனின், அந்தக் கூட்டத்தின் சராசரி வயது 53ஆம்!!! இப்படியான ஒரு ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ள தயங்குவதா, அல்லது இத்தொடரை விட இளஞ்சமுதாயம், reality show என்னும் வகையான மூளையற்ற தொடர்களில் லயித்திருப்பதை எண்ணி வேதனைப்படுவதா என்று தெரியவில்லை! இதைவிட வேடிக்கையான தகவல் என்னவென்றால், Joan of Acardiaவின் இடத்தை நிரப்ப தேர்ந்தெடுக்கப்பட்ட தொடரின் அடிப்படைக் கதை ஒரு இளம்பெண் பேய்களுடன் கதைப்பது...!! CBS தொலைக்காட்சியின் நம்பிக்கை என்னவெனின் இளஞ்சமுதாயம் கடவுளுடன் கதைப்பதைவிட பேய்களுடன் கதைப்பதை விரும்பி வரவேற்பார்களாம்!!!

Saturday, April 02, 2005

சத்யாவைப் பிரிந்து...

நான் மொன்றியல் வந்ததிலிருந்து என்னோடு இருந்த சத்யா வேலை தேடி வான்கூவர் போய்விட்டான். வீட்டில் அவன் இருந்த அறை வெறுமையாக..., கூடவே மனமும் சற்று வெறுமையாக...; வழமையான தொலைக்காட்சியின் சத்தத்தையும் மீறி வீட்டில் ஓர் மயான அமைதி. இவ்வளவு கால வாழ்க்கையில் எத்தனையோ பிரிவுகள் வந்து போனாலும் இன்னும் ஒரு நண்பனின் பிரிவு இப்போதும் பாரமாகத்தான் இருக்கிறது. சத்யா இல்லாத மொன்றியல் பயமாகக்கூட் இருக்கிற்து...!

மீண்டும் மீண்டும்....

இந்தோநேசியா கடற் பரப்பில் மீண்டும் நில நடுக்கம்; சுனாமி அச்சுறுத்தல்; கிழக்கு மாகாணங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு.ஏன் இப்பிடி மீண்டும் மீண்டும் எங்கள் இனத்துக்கே..? இராணுவம் வருகிற்து, குண்டு வீச்சு விமானம் வருகிறது என்று இவர்கள் இடம்பெயர்ந்த நாட்கள் போதாதா? அரசின் அச்சுறுத்தலோடு ஆண்டவனின் அச்சுறுத்தலுமா??