Monday, February 23, 2009

"எல்லாப் புகழும் இறைவனுக்கே"

தமிழ் வார்த்தையொன்றை அமெரிக்க ஆஸ்கார் விருது மேடையில் இவ்வளவு சீக்கிரம் கேட்பேன் என்று நான் எதிர் பார்த்ததில்லை. எனவே நேற்று இரண்டு ஆஸ்கார் விருதுகளை தட்டிக்கொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இந்த வார்த்தையை ஆஸ்கார் மேடையில் உச்சரித்தபோது, உலகின் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுடன் நானும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இதில் இன்னமும் மகிழ்ச்சியூட்டும் விடயம், ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஆஸ்கார் விருதை இலங்கை தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட M.I.A என அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசத்துடன் பகிர்ந்து கொண்டமை. M.I.A விருது மேடைக்கு வரவில்லை என்பது சற்றே வருத்தம். எனினும், ஆஸ்கார் மேடையைவிட, அண்மையில் பிறந்த தனது மகனுடன் அவர் நேற்றைய இரவை பகிர்ந்து கொள்ளத் தீர்மானித்திருக்கின்றார் என்று எண்ணும்போது திருப்தியே.

இந்தியத்தமிழர் ஒருவனின் திறன் சர்வதேச அளவில் மதிக்கப் பட்டிருக்கின்றது என்று எண்ணும்போது மகிழ்ச்சியே. என்றாலும் இந்த அங்கீகரிப்பு, தமிழர் ஒருவரின் திறனை ஆங்கில தயாரிப்பாளர்களின் கைக்குள்ளால்தான் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்பது எங்கேயோ நெருடுகின்றது. முதலாவது தெரிவிலேயே இரண்டு ஆஸ்கார்களை அள்ளிக்கொண்டு போனாலும், இதுதான் ஏ.ர்.ரஹ்மானின் படைப்புகளில் மிகச்சிறந்தது இல்லை என்பது, அவரின் படைப்புகளை "ரோஜா" காலத்திலிருந்து ரசித்துக்கொண்டுவந்திருக்கும் தமிழர் எங்களிற்குத் தெரியும். தவிர இளையராஜாவிற்கும் ஒரு ஆஸ்கார் போயிருக்கவேண்டும் என்ற ஒரு எண்ணப்பாடும் எழாமல் இல்லை!

ஆஸ்கார் மேடையில் ஆளுக்கு ஆள் வந்து கண்கலங்கிவிட்டுப் போக, ரஹ்மான் மட்டும் மிகவும் தண்மையாக, பர பரப்பின்றி உரையாற்றினார். என்றாலும் ஆள் மேடைப்பேச்சுக்கு பழக்கப் பட்டவர் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சுருக்கமான அவரது உரையில் பிழையேதும் இல்லை. என்றாலும் எனது முறைப்பாடெல்லாம், அவர் அந்த ஆஸ்கார் மேடையை இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு பாவிக்கவில்லை என்பதுதான். ஆஸ்கார் மேடை அரசியல் செய்திகளின் அரங்கமாக அமைவது புதுமையில்லை; நேற்றுக்கூட ஓருனின பாலியல் சோடிகளின் சார்பாக பல குரல்கள் அந்த மேடையில் எழுப்பப் பட்டதை இங்கு குறிப்பிடவேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஏதாவது ஒரு தரப்பில் சேர்ந்து குரல் எழுப்பச் சொல்லி நான் கேட்கவில்லை. இலங்கைத் தமிழரின் துயருக்காக வருந்துகின்றேன் என்று மட்டும் சொல்லியிருக்கலாம். மிகுதியை சர்வதேச சமுகம் Google'இலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும்.

எப்படியோ போகட்டும்... ஆஸ்கார் மேடையில் என்னை ஏற்றி விட்டால் எனது பெயர் கூட எனக்கு மறந்து விடும். இதற்குள் நான் இங்கே அதைப் பேசவில்லை, இதைப் பேசவில்லை என்று கொண்டு... எப்படியெனினும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரஹ்மானிற்கும், மாதங்கியிற்கும்...

Thursday, March 27, 2008

இணையத்தில் தமிழ் வானொலி

இணையத்தில் தமிழ் வானொலியைத் தேடிக்கொண்டிருக்கும்போது இந்த இணையத்தள்த்தை கண்டுபிடித்தேன்: http://www.fmworldmusic.com/ விளம்பரங்கள் இல்லாத, எந்தவிதமான வேறு மென்பொருளும் தேவையில்லாத வானொலி. இது தவிர, உங்கள் சுவைக்குத் தகுந்தவாறான அலைவரிசையையும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். மொத்தத்தில் ஆறு அலைவரிசைகள் உள்ளன. உங்களின் விருப்பமான இணைய வானொலி என்ன?

Monday, August 06, 2007

Hollywood'உம் Bollywood'உம்

அரைக்கரைவாசி தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் படங்களும் பார்ப்பவன் என்கிறமுறையில் எங்கள் தமிழ் பட ஆக்குணர்களின் கிண்ற்றுத் தவளை மனர்ப்பான்மையயை எண்ணி மனம்வருந்துவதை தவிர்க்க முடியவில்லை.

நிச்சயமாக செலவுத்திட்ட அளவில் தமிழ்படங்கள் ஆங்கிலப்படங்களோடு போட்டி போட முடியாது. இருந்தாலும் இது இப்போது முட்டுக்கட்டையாக இருப்பது பெரிய அளவிலான விறுவிறுப்புப் படங்களை (e.g. "Lord of the Rings" or "Terminator 3" or "Pirates of the Caribbean") எடுப்பதற்கு மட்டும்தான். இதைத்தவிர தமிழகத்தின் இப்போதைய திறணளவில் வேறு எதையுமே சாதிக்க முடியும்.

தமிழ் படங்களின் இன்றைய அல்லது இற்றைவரையிலான சாபக்கேடுகளை எடுத்துப்பார்தோமானால்:

  • நம்பகத்தன்மை (reality): இன்றைவரையில் கதாநாயகர்கள் சப்பாத்தோடுதான் வயற்காட்டில் நடக்கிறார்கள்; கதாநாயகிகள் ஒப்பனை கலையாமல்தான் காலையில் கண்விழிக்கிறார்கள்.
  • உண்மைக்கு முரண்மைகள் (factual errors): multiple personality disorder பேயடித்து போகாது; நெஞ்சில் குண்டுவாங்கியபிறகு சொந்தக்காரர் எல்லாரோடும் கதைத்துமுடிக்க நேரம் இருக்காது; இருதயம் நின்று பத்து நிமிடத்துக்குப்பிறகு CPR கொடுத்து பிரயோசனம் இல்லை.
  • புளித்துப் போன கதையோட்டங்கள்: எப்பத்தான் எங்களது ஆட்கள் வில்லன் என்று இல்லாமல் ஒரு படம் எடுக்கப் போகின்றார்கள்?
  • படப் பாட்டுகள்: என்னைப் பொறுத்தவரை எப்போது இந்த காதல் பாட்டுகள் படங்களைவிட்டுப்போகுதோ அப்போதுதான் தமிழ் படவுலகுக்கு விடிவு காலம். பாட்டுகளை விட பின்ணணி இசை ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இன்னமும் நாங்கள் உணர்ந்தமாதிரி இல்லை.
  • குழந்தை நடசத்திரங்கள்: ஷாலினிதான் இவ்வளவு காலம் வந்ததற்குள்ளே ஒரு சிறந்த குழந்தை நட்சத்திரம்என்று எங்களுக்கு ஒரு எண்ணம். Overactingதான் சரியான வழி இல்லை - "I am Sam"ல் Dakota Fanning'ஐ நீங்கள் பார்க்க வேண்டும், அல்லது "Bridge to Terabithia"!
இப்பிடியே அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு சில இயக்குணர்கள் மட்டுமே மேற்கூறப்பட்ட குறைக்ள் இல்லாமல் எடுக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். 90% ஆன படங்கள் வழமையான தமிழ்பட விதிமுறைகளுக்குள்ளேயே நின்று மாரடிக்கின்றன.

அண்மையில் சில பழைய ஆங்கிலப் படங்களை பார்த்தேன்: Jaws (1975), E.T: The Extra-Terrestrial (1982), 2001: A Space Odessey (1968), Rocky (1976), An Affair to Remember (1957) , God Farther (1972). கதையைப் பொறுத்தவரை ஒவ்வொன்றும் வேறுபட்டவை. ஆனால் திரைப்படக் கலையைப் பொறுத்தவரை இவற்றிலிருந்து நாங்கள் படிக்கவேண்டியது எவ்வளவோ இருக்கின்றது. "An Affair to Remember"என்பது ஒரு சாதாரண Bollywood-style காதல் கதை. என்றாலும் இந்த 50 வருடங்களுக்குப் முந்திய படத்திலிருந்து நாங்கள் படிப்பதற்கு நிறைய இருக்கின்றது! (realistic story, scripting, good story telling, cinematography, background music, etc.)

Saturday, December 23, 2006

Areeba


Areeba
Originally uploaded by bmmaran.

குழந்தைகளை பார்ப்பது எப்போதுமே கண்ணுக்கு குளிர்ச்சியான விடயம்தான். அவர்கள் தூங்கும்போது பார்ப்பது மேலும் குளிர்மை...இப்படியான ஒரு தூக்கம் எப்பொழுதுமே இனிமேலும் எங்க்ளுக்கு கிடைக்கப்போவதில்லை என்று எண்ணும்போது சிறிது கவலையும் கூட...

எனது நண்பனின் குடும்பம் எனது வீட்டிற்கு வந்திருந்தபோது எடுத்த படம்..

Friday, July 14, 2006

எங்கே எம் காதல்?

நீண்ட நாட்களின் பின்னர் அன்றொரு நாள் தமிழ் திரைப்படப் பாடல்களை சிரத்தையோடு கேட்டுக்கொண்டிருந்தேன். வழமையாக இசையோடு நின்றுவிடும் என் காது அன்று வார்த்தைகளையும் அவதானித்துக்கொண்டிருந்தது. சும்மா சொல்லக்கூடாது, ஆங்கில பாடல்களோடு ஒப்பிடும்போது தமிழ் பாடல்கள் காதல் ரசத்தை கசிய விடுவதில் ஈடு இணையற்றவைகள்! உதாரணத்துக்கு "நீ காற்று, நான் மரம்.." அல்லது "பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..". இவ்வளவு தூரம் காதலை பாடல்களில் வடிய விடுகின்ற நாங்கள், வாழ்க்கையில் அதை எங்கே தொலைத்தோம்?

இங்கே மேலை நாட்டவரைப் பார்க்கும்போது மெச்சத்தோன்றுகிறது. பகிரங்க அரவணைப்புக்கள், முத்தங்கள், romantic dinners (இதற்கு தமிழ் கூட எனக்குத்தெரியவில்லை!), romantic dances, பரச்பரம் "I love you" சொல்லிக்கொள்ளுவது, காதலை வெளிப்படுத்துவதற்கு இப்படியாக பல செயற்பாடுகள். நாங்களோ தெரிந்தவர்கள் மத்தியில் மனைவியின் கையைப்பிடித்துக்கொள்ளக்கூட தயங்குகின்றோம்! காதல்ரசம் இன்றைய பாடல்களில் மட்டுமல்ல, பண்டையகாலத்திலிருந்தே அது தமிழ் இலக்கியத்தின் ஒரு அம்சம். அதைப் பார்க்கும்போது எமது அன்றாட காதல் வாழ்வு மேற்கத்தையவரைவிட செழிப்பாக இருக்கவேண்டும், ஆனால் ஏன் அப்படி இல்லை?

சிலவேளை எனது ஐயப்பாடு தேவையற்றதாக இருக்கலாம். எமது காதலர்கள்/தம்பதிகள் பகிரங்க வெளிப்பாட்டை விட அந்தரங்க வெளிபாட்டை விரும்புகிறவர்களாக இருக்கலாம். பகிரங்கக் காதலைவிட இது உறுதியானதாக இருக்கலாம். ஆனால் எனக்கென்றால் அந்தரங்கத்தில் காதல் வருமோ காமம் வருமோ என்பது இன்னமும் சந்தேகமே...

Friday, February 24, 2006

காதலர் தினத்தில்

காதலர் தினத்தில் மட்டும் திடீரென்று என்னவென்றுதான் அப்படி காதல் உணர்வு முகிழ்க்கின்றதோ எனக்கென்றால் புரியவில்லை - பூச்செண்டுகளும், அரவணைப்புகளும், பகிரங்க முத்தங்களுமாக... என்னவோ மக்கள் மகிழ்ச்சியாய் இருந்தால் சரிதான்!

சரி, அது இருக்க, காதாலர் தினமன்று ரயிலில் வரும்போது ஒரு பெண் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் - புத்தகத்தின் பெயர்: Wedding For Dummies!!! நான் அவ்விடத்தில் வாய்விட்டு சிரிக்காதது பெரிய விடயம்! இப்படியெல்லாம் புத்தகம் எழுதுகிறார்கள் என்ற விடயத்தைவிட, புத்தகத்தின் தலைப்பில் இருந்த இரு அர்த்தம்தான் மிகவும் வேடிக்கையாக இருந்தது. சற்றே எட்டிப்பார்த்தேன், அவர் படித்துக்கொண்டிருந்த அத்தியாயத்தின் பெயர்: who you gonna invite...? (ஆ, கடவுளே...!)

Wednesday, August 31, 2005

Joan of Arcadia

நீண்ட நாட்களின் முன் எழுத நினைத்தது: Joan of Arcadia என்று ஒரு தொலைக்காட்சித் தொடர் எனது அபிமானத்துக்குரியாதாய் இருந்தது. அதன் அடிப்படை கதையோட்டம் வேடிக்கையானதுதான்: ஒரு பதினாறு வயதுப் பெண்ணுடன் கடவுள் வேறு வேறு உருவங்களில் வந்து பேசுவார்; சில வேலைகளைச் செய்யச்சொல்லி பணிப்பார். தொடரின் கதையோட்டம் சிறுபிள்ளைத்தனமானதாக இருந்தாலும் அந்தத் தொடர் அப்படியல்ல. தொடரின் உருவாக்குனரும் எழுத்தாசிரியரும் இந்தக்கதையை வைத்துக் கொண்டு மனித இனத்தினதும் சமுகத்தினதும் வேறு வேறு அம்சங்களையும் அவலட்சணங்களையும் அலசி ஆராய்ந்திருந்தனர். என்னை சிந்திக்க, சிரிக்க, ஏன் அழ வைத்த ஒரு தொடர் இது. முதலாவது பாகத்தில் Golden Globe விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட இந்தத்தொடர், இரண்டாவது பாகம் முடிந்ததோடு துண்டிக்கப்பட்டது (கதை முடியும் முன்னர்)!!

காரணம்? ரசிகர் தொகை கவர்ச்சிகரமாக இல்லையாம்!! இத்தொடரின் ரசிகர் கூட்டத்தில் ஒரு முக்கியமான தரவு என்னவெனின், அந்தக் கூட்டத்தின் சராசரி வயது 53ஆம்!!! இப்படியான ஒரு ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ள தயங்குவதா, அல்லது இத்தொடரை விட இளஞ்சமுதாயம், reality show என்னும் வகையான மூளையற்ற தொடர்களில் லயித்திருப்பதை எண்ணி வேதனைப்படுவதா என்று தெரியவில்லை! இதைவிட வேடிக்கையான தகவல் என்னவென்றால், Joan of Acardiaவின் இடத்தை நிரப்ப தேர்ந்தெடுக்கப்பட்ட தொடரின் அடிப்படைக் கதை ஒரு இளம்பெண் பேய்களுடன் கதைப்பது...!! CBS தொலைக்காட்சியின் நம்பிக்கை என்னவெனின் இளஞ்சமுதாயம் கடவுளுடன் கதைப்பதைவிட பேய்களுடன் கதைப்பதை விரும்பி வரவேற்பார்களாம்!!!