Saturday, December 23, 2006

Areeba


Areeba
Originally uploaded by bmmaran.

குழந்தைகளை பார்ப்பது எப்போதுமே கண்ணுக்கு குளிர்ச்சியான விடயம்தான். அவர்கள் தூங்கும்போது பார்ப்பது மேலும் குளிர்மை...இப்படியான ஒரு தூக்கம் எப்பொழுதுமே இனிமேலும் எங்க்ளுக்கு கிடைக்கப்போவதில்லை என்று எண்ணும்போது சிறிது கவலையும் கூட...

எனது நண்பனின் குடும்பம் எனது வீட்டிற்கு வந்திருந்தபோது எடுத்த படம்..

Friday, July 14, 2006

எங்கே எம் காதல்?

நீண்ட நாட்களின் பின்னர் அன்றொரு நாள் தமிழ் திரைப்படப் பாடல்களை சிரத்தையோடு கேட்டுக்கொண்டிருந்தேன். வழமையாக இசையோடு நின்றுவிடும் என் காது அன்று வார்த்தைகளையும் அவதானித்துக்கொண்டிருந்தது. சும்மா சொல்லக்கூடாது, ஆங்கில பாடல்களோடு ஒப்பிடும்போது தமிழ் பாடல்கள் காதல் ரசத்தை கசிய விடுவதில் ஈடு இணையற்றவைகள்! உதாரணத்துக்கு "நீ காற்று, நான் மரம்.." அல்லது "பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..". இவ்வளவு தூரம் காதலை பாடல்களில் வடிய விடுகின்ற நாங்கள், வாழ்க்கையில் அதை எங்கே தொலைத்தோம்?

இங்கே மேலை நாட்டவரைப் பார்க்கும்போது மெச்சத்தோன்றுகிறது. பகிரங்க அரவணைப்புக்கள், முத்தங்கள், romantic dinners (இதற்கு தமிழ் கூட எனக்குத்தெரியவில்லை!), romantic dances, பரச்பரம் "I love you" சொல்லிக்கொள்ளுவது, காதலை வெளிப்படுத்துவதற்கு இப்படியாக பல செயற்பாடுகள். நாங்களோ தெரிந்தவர்கள் மத்தியில் மனைவியின் கையைப்பிடித்துக்கொள்ளக்கூட தயங்குகின்றோம்! காதல்ரசம் இன்றைய பாடல்களில் மட்டுமல்ல, பண்டையகாலத்திலிருந்தே அது தமிழ் இலக்கியத்தின் ஒரு அம்சம். அதைப் பார்க்கும்போது எமது அன்றாட காதல் வாழ்வு மேற்கத்தையவரைவிட செழிப்பாக இருக்கவேண்டும், ஆனால் ஏன் அப்படி இல்லை?

சிலவேளை எனது ஐயப்பாடு தேவையற்றதாக இருக்கலாம். எமது காதலர்கள்/தம்பதிகள் பகிரங்க வெளிப்பாட்டை விட அந்தரங்க வெளிபாட்டை விரும்புகிறவர்களாக இருக்கலாம். பகிரங்கக் காதலைவிட இது உறுதியானதாக இருக்கலாம். ஆனால் எனக்கென்றால் அந்தரங்கத்தில் காதல் வருமோ காமம் வருமோ என்பது இன்னமும் சந்தேகமே...

Friday, February 24, 2006

காதலர் தினத்தில்

காதலர் தினத்தில் மட்டும் திடீரென்று என்னவென்றுதான் அப்படி காதல் உணர்வு முகிழ்க்கின்றதோ எனக்கென்றால் புரியவில்லை - பூச்செண்டுகளும், அரவணைப்புகளும், பகிரங்க முத்தங்களுமாக... என்னவோ மக்கள் மகிழ்ச்சியாய் இருந்தால் சரிதான்!

சரி, அது இருக்க, காதாலர் தினமன்று ரயிலில் வரும்போது ஒரு பெண் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் - புத்தகத்தின் பெயர்: Wedding For Dummies!!! நான் அவ்விடத்தில் வாய்விட்டு சிரிக்காதது பெரிய விடயம்! இப்படியெல்லாம் புத்தகம் எழுதுகிறார்கள் என்ற விடயத்தைவிட, புத்தகத்தின் தலைப்பில் இருந்த இரு அர்த்தம்தான் மிகவும் வேடிக்கையாக இருந்தது. சற்றே எட்டிப்பார்த்தேன், அவர் படித்துக்கொண்டிருந்த அத்தியாயத்தின் பெயர்: who you gonna invite...? (ஆ, கடவுளே...!)