Monday, February 23, 2009

"எல்லாப் புகழும் இறைவனுக்கே"

தமிழ் வார்த்தையொன்றை அமெரிக்க ஆஸ்கார் விருது மேடையில் இவ்வளவு சீக்கிரம் கேட்பேன் என்று நான் எதிர் பார்த்ததில்லை. எனவே நேற்று இரண்டு ஆஸ்கார் விருதுகளை தட்டிக்கொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இந்த வார்த்தையை ஆஸ்கார் மேடையில் உச்சரித்தபோது, உலகின் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுடன் நானும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இதில் இன்னமும் மகிழ்ச்சியூட்டும் விடயம், ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஆஸ்கார் விருதை இலங்கை தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட M.I.A என அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசத்துடன் பகிர்ந்து கொண்டமை. M.I.A விருது மேடைக்கு வரவில்லை என்பது சற்றே வருத்தம். எனினும், ஆஸ்கார் மேடையைவிட, அண்மையில் பிறந்த தனது மகனுடன் அவர் நேற்றைய இரவை பகிர்ந்து கொள்ளத் தீர்மானித்திருக்கின்றார் என்று எண்ணும்போது திருப்தியே.

இந்தியத்தமிழர் ஒருவனின் திறன் சர்வதேச அளவில் மதிக்கப் பட்டிருக்கின்றது என்று எண்ணும்போது மகிழ்ச்சியே. என்றாலும் இந்த அங்கீகரிப்பு, தமிழர் ஒருவரின் திறனை ஆங்கில தயாரிப்பாளர்களின் கைக்குள்ளால்தான் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்பது எங்கேயோ நெருடுகின்றது. முதலாவது தெரிவிலேயே இரண்டு ஆஸ்கார்களை அள்ளிக்கொண்டு போனாலும், இதுதான் ஏ.ர்.ரஹ்மானின் படைப்புகளில் மிகச்சிறந்தது இல்லை என்பது, அவரின் படைப்புகளை "ரோஜா" காலத்திலிருந்து ரசித்துக்கொண்டுவந்திருக்கும் தமிழர் எங்களிற்குத் தெரியும். தவிர இளையராஜாவிற்கும் ஒரு ஆஸ்கார் போயிருக்கவேண்டும் என்ற ஒரு எண்ணப்பாடும் எழாமல் இல்லை!

ஆஸ்கார் மேடையில் ஆளுக்கு ஆள் வந்து கண்கலங்கிவிட்டுப் போக, ரஹ்மான் மட்டும் மிகவும் தண்மையாக, பர பரப்பின்றி உரையாற்றினார். என்றாலும் ஆள் மேடைப்பேச்சுக்கு பழக்கப் பட்டவர் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சுருக்கமான அவரது உரையில் பிழையேதும் இல்லை. என்றாலும் எனது முறைப்பாடெல்லாம், அவர் அந்த ஆஸ்கார் மேடையை இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு பாவிக்கவில்லை என்பதுதான். ஆஸ்கார் மேடை அரசியல் செய்திகளின் அரங்கமாக அமைவது புதுமையில்லை; நேற்றுக்கூட ஓருனின பாலியல் சோடிகளின் சார்பாக பல குரல்கள் அந்த மேடையில் எழுப்பப் பட்டதை இங்கு குறிப்பிடவேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஏதாவது ஒரு தரப்பில் சேர்ந்து குரல் எழுப்பச் சொல்லி நான் கேட்கவில்லை. இலங்கைத் தமிழரின் துயருக்காக வருந்துகின்றேன் என்று மட்டும் சொல்லியிருக்கலாம். மிகுதியை சர்வதேச சமுகம் Google'இலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும்.

எப்படியோ போகட்டும்... ஆஸ்கார் மேடையில் என்னை ஏற்றி விட்டால் எனது பெயர் கூட எனக்கு மறந்து விடும். இதற்குள் நான் இங்கே அதைப் பேசவில்லை, இதைப் பேசவில்லை என்று கொண்டு... எப்படியெனினும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரஹ்மானிற்கும், மாதங்கியிற்கும்...

2 comments:

வந்தியத்தேவன் said...

மணியண்ணா நேரம் கிடைக்கும் போது நிறைய எழுதுங்கோ அண்ணா.

http://enularalkal.blogspot.com/2009/09/blog-post_12.html

அன்புடன் மலிக்கா said...

எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே!

http://niroodai.blogspot.com/2011/12/blog-post_22.html